×

கேரள அரசு தலைமை செயலருக்கு அரசு கடிதம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவோடு மறுபதிப்பு செய்யப்பட்ட “பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்” என்னும் நூலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வெளியிட்டார். தொடர்ந்து தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மற்றும் அரசு இசைக் கல்லூரியை சேர்ந்த 108 மாணவ, மாணவியரின் சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் பாராயணம் மற்றும் மயூர வாகன சேவன காட்சிகளை விளக்கும் நாட்டிய நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: முருகப்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தூய பக்தியையும், அவர் இயற்றிய சண்முகக் கவசத்தின் மகிமையையும் தம் மெய்யடியார்கள் அறியும் வண்ணம் திருவிளையாடல் புரிந்த நிகழ்வு மயூர வாகன சேவன விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இச்சிறப்புமிக்க மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா மூன்று நாட்கள் திருவான்மியூர் பாம்பன் குமரகுருபர சுவாமி கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி “பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்” என்னும் நூலினை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவோடு வெளியிட்டிருக்கிறோம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரலாறு காண அளவிற்கு பக்தர்கள் வருவதால் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வரும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகள் விரைவான தரிசனத்திற்குரிய ஏற்பாடுகள் குறித்து நமது தலைமைச் செயலர் கேரள அரசு தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் மற்றும் தலைவரிடமும் பேசியுள்ளோம்.வரும் காலங்களில் இதுபோன்ற கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கும் கேரள அரசு பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அவற்றிற்கு தமிழ்நாடு அரசும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கேரள அரசு தலைமை செயலருக்கு அரசு கடிதம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Kerala Govt. ,Minister ,Shekharbabu ,Sabarimala ,CHENNAI ,year ,Mayura Vahana Seva festival ,Thiruvanmiyur Pampan Kumaragurudasar Swamy Temple ,PK Shekharbabu ,Chief Secretary of ,Kerala Government ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை